கரும்பு நிலுவை தொகையை ஜூலை இறுதிக்குள் வழங்க அறிவுரை முத்தரப்புக் கூட்டத்தில் முடிவு
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கரும்பு நிலுவை தொகை அறிக்கை நாளை(ஜூலை 18) குறைதீர் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என முத்தரப்புக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.விருதுநகரில் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் வேளாண் இணை இயக்குனர், நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், தரணி சர்க்கரை ஆலை நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் நடந்தது.இதில் 2018-19ம் ஆண்டு கரும்பு அரவைக்காக சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த ராஜபாளையம் 240 விவசாயிகள், ஸ்ரீவில்லிபுத்துார் 30 விவசாயிகள், வத்திராயிருப்பு 13 என 283 விவசாயிகளுக்கு வாசுதேவநல்லுார் தரணி சர்க்கரை ஆலை நிறுவனம் வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.2 கோடியே 61 லட்சத்து 88 ஆயிரம் உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டது.விரைந்து ஜூலைக்குள் வழங்க எடுத்த நடவடிக்கை விவரத்தை சமர்ப்பிக்க ஆலை நிர்வாகத்திற்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஜூலைக்குள் நிலுவை தொகையை செலுத்தாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்க ஆலை சேர்மன், தலைவர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து அறிக்கையாக நாளை(ஜூலை 18) நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.