உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் டாஸ்மாக் ஊழியர் கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

சாத்துாரில் டாஸ்மாக் ஊழியர் கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் டாஸ்மாக் கடை ஊழியர் காந்திராஜ் 33, என்பவரை கொலை செய்த வழக்கில் கிருஷ்ண பிரபு, மகாலிங்க சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாத்துார் அருகே இருக்கன்குடியைச் சேர்ந்தவர் காந்திராஜ். இவர் 2023 அக்.,10 காலை 11:45 மணிக்கு சாத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்தபோது, நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண பிரபு, மகாலிங்க சுந்தரமூர்த்தி கடைக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். இருக்கன்குடி போலீசார் கிருஷ்ண பிரபு 27, மகாலிங்க சுந்தரமூர்த்தி 21, காளிமுத்து 53, சுப்பையா பாண்டி 25, தனசேகரன் 26, மாரிச் செல்வம் 24, மணிகண்டன் 24, ஆகியோரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் கொலையான காந்தி ராஜின் உறவினர் மாடேஸ்வரன், கைதான காளிமுத்துவை மது பாட்டிலால் தாக்கிய விரோதத்தின் காரணமாக கொலை நடந்துள்ளது தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் கிருஷ்ணபிரபு, மகாலிங்க சுந்தரமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மற்ற 5 பேரை விடுதலை செய்தும் நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். நீதிமன்ற வளாகத்தில் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ