விதி மீறி அரசு மருத்துவக்கல்லுாரி சர்வீஸ் ரோட்டில் செல்லும் டூவீலர்கள் விபத்து அபாயம் அதிகரிப்பு
விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலப்பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையில் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட துாரம் சென்று திரும்புவதை தவிர்க்க அரசு மருத்துவக்கல்லுாரி சர்வீஸ் ரோட்டில் எதிர்திசையில் சென்று வரும் டூவீலர்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு விருதுநகர், சிவகாசி ரோடுகளில் இருந்து சென்று வர ஏதுவாக சர்வீஸ் ரோட்டில் சென்று மீண்டும் சர்வீஸ் ரோட்டில் திரும்பி அலுவலக வளாகத்திற்கு வர மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விருதுநகர், சிவகாசியில் இருந்து டூவீலரில் செல்பவர்கள் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு எதிரே உள்ள சென்டர் மீடியனை கடந்து சர்வீஸ் ரோட்டில் எதிர்திசையில் பயணித்து கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை மறித்து தடுப்புகளை வைத்தனர். இந்த தடுப்புகள் பிளாஸ்டிக் கொண்டு இருப்பதால் டூவீலரில் செல்பவர்கள் எளிதாக தடுப்பை அகற்றி சர்வசாதாரணமாக சென்டர் மீடியனை கடந்து அரசு மருத்துவக்கல்லுாரி சர்வீஸ் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் சென்று வருகின்றனர். இது போன்று எதிர்திசையில் செல்லும் டூவீலர்கள் சர்வீஸ் ரோட்டில் மதுரை நோக்கி செல்லும் பஸ்கள், லாரிகளில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையில் இருந்து வேகமாக சென்டர் மீடியனில் ஏறுவதற்காக திரும்பும் டூவீலர்கள் மண் இடறி விபத்துக்குள்ளாகும் வாய்ப்பும் உண்டாகியுள்ளது. எனவே மேம்பாலப்பணிகள் முடியும் வரை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு எதிரே நான்கு வழிச்சாலையில் வலுவான நிரந்தர தடுப்புகளை வைத்து டூவீலர்கள் விதிமீறி செல்வதை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.