பராமரிக்காத கால்நடை குடிநீர் தொட்டிகள்; கிடைக்கும் லீக் தண்ணீரில் கூட தேடுது தஞ்சம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் முழுவதும் காட்சி பொருளாக உள்ள கால்நடை குடிநீர் தொட்டிகளை, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் பராமரிக்காது விட்டதால் புதர்மண்டியுள்ளன. இதனால் பாடாய்படுத்தும் கோடை வெயிலுக்கு கிடைக்கும் 'லீக்' தண்ணீரில் கூட கால்நடைகள் தஞ்சம் தேடுகின்றன.கோடை போன்ற வறட்சி காலங்களில் கண்மாய்கள், ஊருணிகளில் தண்ணீர் இருப்பதில்லை. இந்நேரங்களில் தண்ணீருக்காக கால்நடைகள் அலைகின்றன. கண்மாய் பகுதியை யொட்டிய காடுகளிலிருந்து வரும் மான்களும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு கால்நடைகள் குடிநீரைதேடி அலையாத வகையில் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.ஆனால் இதை முறையாக அமைக்காமல் கடமைக்கு தொட்டியை கட்டினர். கட்டியதோடு சரி . தண்ணீர் சேகரம் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதோடு தொட்டிகளும் தரமாக கட்டப்படவில்லை. இதனால் பெரும்பாலான தொட்டிகள் பயன்பாடின்றி காட்சி பொருளாக தான் உள்ளன.ரூ.லட்சக்கணக்கில் செலவிட்ட அரசு நிதி வீணானது தான் மிச்சம். இனியாவது தொட்டிகளை புதுப்பித்து கால்நடைகள் தண்ணீர் அருந்துவதற்கு ஏற்ற வகையில் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் கால்நடை தொட்டிகளை அரசு அமைத்திருப்பது நல்ல விஷயம் தான். இது தண்ணீர் தேடி ஓடும் கால்நடைகளுக்கு வசதியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான தொட்டிகள் தண்ணீரின்றி முட்புதர்கள் வளர்ந்து பயன்பாடின்றி கிடப்பதான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது என்கின்றனர் மக்கள்.தற்போது கால்நடைகள் வெப்ப அயற்சியால் பாதிக்கப்படுவதை தடுக்க போதிய இடைவெளியில் நீர் வைப்பது அவசியமாக உள்ளது. ஆனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வோர் வறண்ட நீர்நிலைகளாலும், புதர்மண்டிய தொட்டிகளாலும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் கால்நடைகள் வேறு வழியின்றி 'லீக்'குடிநீரை குடிக்கும் அவலங்கள் அரங்கேறுகிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் புதர்மண்டிய கால்நடை குடிநீர் தொட்டிகளை செயல்படுத்த வேண்டும்.