உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலையம்பட்டியில் தேங்கி கிடக்கும் குப்பை ஒன்றிய அலுவலகத்தில் நிற்கும் வாகனங்கள்

பாலையம்பட்டியில் தேங்கி கிடக்கும் குப்பை ஒன்றிய அலுவலகத்தில் நிற்கும் வாகனங்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒன்றிய ஊராட்சிகளில் குப்பை, அள்ள வாகனங்கள் இல்லாமல் குவிக்கப்பட்டு வரும் நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பை அள்ள பயன்படும் பேட்டரி வாகனங்கள் காட்சி பொருளாக உள்ளது.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகளில் தேங்கும் குப்பை அள்ள முறையான வாகன வசதி இல்லை. பல ஊராட்சிகளில் தள்ளு வண்டிகளில் குப்பை அள்ளி தூய்மை பணியாளர்கள் கிடங்கில் கொட்டி வந்தனர்.அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரியால் இயங்கும் நவீன குப்பை வாகனங்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 61 பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஊராட்சிகளுக்கு உடனடியாக வழங்காமல், இந்த பேட்டரி வாகனங்கள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பாலையம்பட்டி புறநகர் பகுதிகளான ராஜீவ் நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அள்ளாமல் குவிந்துள்ளது.2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் பாலையம்பட்டிக்கு ஆய்வு செய்ய வந்தபோது மெயின் ரோட்டில் மட்டும் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தினர். ஆனால் புறநகர் பகுதி தெருக்களில் குப்பை தேங்கி கிடக்கிறது.குப்பை அள்ள போதுமான வாகனங்கள், பணியாளர்கள் இல்லை என ஊராட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் குப்பை அள்ள ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய குப்பை வண்டிகள் ஒன்றிய அலுவலகத்தில் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் காட்சி பொருளாக நிற்கின்றன.மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்களை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை