உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் திணறும் விற்பனையாளர்கள்

முதியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் திணறும் விற்பனையாளர்கள்

அருப்புக்கோட்டை: அரசின் தாயுமானவர் திட்டத்தில் முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்குவதில் கூடுதல் பணி சுமை காரணமாக ரேஷன் விற்பனையாளர்கள் உதவியாளர்கள் இன்றியும் திணறி வருகின்றனர். ஆக.25 ல், தாயுமானவர் திட்டத்தை தமிழக அரசு துவங்கி செயல்படுத்தி வருகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கி வரும் திட்டம் இது. அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் அவர்களுக்கு உரிய பகுதிகளில், மாதத்தில், 60 ரேஷன் கார்டுகளுக்குள் இருந்தால் 1 நாள் மற்றும் அதற்கு மேல் உள்ள கார்டுகளுக்கு 2 நாள் என வினியோகம் செய்து வருகின்றனர். பொருட்களை வினியோகம் செய்கின்ற போது, சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களுக்கு குறுஞ்செய்தி அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கின்றனர். பலர் தங்கள் அலைபேசி எண்ணை மாற்றி உள்ளனர். இதை முறையாக தெரிவிப்பதும் இல்லை. வீடுகளுக்கு சென்று அங்குள்ள முதியோர்களிடம் கைரேகை வாங்கும்போது பலரின் கைரேகையை கருவி ஏற்க மறுப்பதால், பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இதனால் பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. மீண்டும் ஒரு நாள் வந்து அவர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து விற்பனையாளர்கள் : தாயுமானவர் திட்டத்தால் எங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. எங்களுக்கு உதவியாளர்களும் இல்லை. நாங்களே அனைத்து பணிகளையும் செய்ய வேண்டி இருக்கிறது. முதியோர்களை வீடு தேடி சென்றால், பலர் வீடு மாறி சென்றுள்ளனர். சிலர் வெளியூரில் இருக்கின்றனர். இதனால் எங்களுக்கு அவர்களிடமிருந்து கைரேகை பெற முடியாமலும் பொருட்களை வினியோகம் செய்ய முடியாமலும்அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய தனியான ஊழியர்களை நியமிக்க வேண்டும். எங்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது. அதிகாரிகளிடம் கூறினால் அரசின் கொள்கை முடிவு. திட்டத்தை செயல்படுத்திய ஆக வேண்டும் என கண்டிப்பு காட்டுகின்றனர். இது ஒரு நல்ல திட்டம். இதற்குத் தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை