கோயிலில் பாலாலயம்: கிராமத்தினர் எதிர்ப்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அர்ச்சனாபுரம் நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் அண்ணன், தங்கை பாசத்திற்கு உதாரணமாக திகழ்ந்த நல்லதங்காள் கோயில், வத்திராயிருப்பு அர்ச்சனாபுரத்தில் உள்ளது. இக்கோயிலில் இருந்த நல்லதங்காள் சிலை ஜன. 26ல் உடைக்கப்பட்டது. கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத்துறை திட்டமிட்டது. இதற்கு அர்ச்சனாபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சிலையை தாங்களே நிறுவி வழிபட அனுமதிக்க கோரி சில நாட்களுக்கு முன்பு வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று காலை அறநிலையத்துறை சார்பில் கோயிலில் பாலாலயம் செய்ய முயற்சித்த போது, கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். செயல் அலுவலர் சக்கரையம்மாள், தாசில்தார் ஆண்டாள், டி.எஸ்.பி. ராஜா அதிகாரிகள் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஜூலை 16ல் மீண்டும் பாலாலயம் நடத்த உள்ளதாகவும், கிராம மக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டனர்.