20 குவாரிகளில் விதி மீறல்: அபராதம் விதிக்க நடவடிக்கை
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் 20 குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் விதி மீறி கனிமங்களை வெட்டிஎடுத்ததால் ரூ. பல கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கனிமவளத் துறை சார்பில் 102 குவாரிகள் இயங்குகின்றது. முதற்கட்டமாக 82 குவாரிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். 2025 துவக்கத்தில் 40 குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதில் விதி மீறி இயங்கிய குவாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. செப். 11, 12 ல் மாவட்டத்தில் சாத்துார், வெம்பக்கோட்டை, சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 20 குவாரிகள் ட்ரோன் மூலமாக அளவீடு செய்யப்பட்டது. இதில் பெரும்பான்மையான குவாரிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கனிமங்களை வெட்டி எடுத்து விதி மீறி இயங்கியது கண்டறியப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் சுகதார ஹீமா கூறுகையில், 'ஏற்கனவே விதிமீறிய குவாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 20 குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பியுள்ளோம். அந்த குவாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு தொகை வசூலிக்கப்படும், என்றார்.