விருதுநகர் அரசு மருத்துவமனை மேம்பால சர்வீஸ் ரோடுகள் சேதம்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் மேம்பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் இருபுறமும் சேதமாகியுள்ளது. இதனால் டூவீலர், ஆட்டோ செல்ல முடியாத நிலை உண்டாகி யுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவிற்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல எதுவாக மேம்பாலமும், அதன் இருபுறமும் பேவர் பிளாக் கற்களால் சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டது. ஆனால் சர்வீஸ் ரோடுகள் முறையாக பராமரிக்கப்படாததால் கற்கள் பெயர்ந்து வந்தது. மேலும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டதால் சேதமானது. பணிகள் முடிந்தும் ரோட்டை சீரமைக்காததால் தற்போது பள்ளங்களால் நிறைந்து உள்ளது. இந்த ரோட்டில் செல்லும் சைக்கிள், டூவீலர், ஆட்டோக்கள் கற்கள் இடறி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் உணவகங்கள், மருத்துவமனைகள் உள்ளதால் வாகனங்களில் வரும் தினசரி வாடிக்கையாளர்கள், பரிசோதனை, சிகிச்சைக்காக வருபவர்கள் செல்ல முடிவதில்லை. இதன் மற்றொரு புறத்தில் சர்வீஸ் ரோடு ஓரத்தில் கழிவு நீர் வடிகால் சிமென்ட் மூடிகள் சேதமாகியுள்ளது. எனவே விருதுநகர் அரசு மருத்துவமனை மேம்பாலத்தின் சேதமான சர்வீஸ் ரோடு, கழிவு நீர் வடிகால் மூடியை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.