விருதுநகர் அரசு மருத்துவமனை குப்பை கிடங்கு இடமாற்றம் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையின் எம்.ஆர்.ஐ., பரிசோதனை பிரிவுக்கு அருகே செயல்பட்ட குப்பை கிடங்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பயோ மெடிக்கல் குப்பை சேகரிப்பு அருகே கொண்டுச் செல்ல நிர்வாகம் முடிவு செய்துள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை திறக்கப்பட்ட போது 645 படுக்கைகள் இருந்தது. ஆனால் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தற்போது 1200க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் செயல்படுகிறது.மேலும் மகப்பேறு பிரிவும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் தினமும் எம்.ஆர்.ஐ., பரிசோதனை பிரிவுக்கு அருகே தகர செட்டில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.இங்கிருந்து வெளியேறிய துர்நாற்றத்தால் பரிசோதனைக்கு காத்திருக்கும் பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையானது. இது குறித்து தினமலர் நாளிதழில் மே. 20ல் செய்தி வெளியானது.இதையடுத்து எம்.ஆர்.ஐ., பரிசோதனை பிரிவுக்கு அருகே செயல்பட்ட குப்பை கிடங்கை, பயோ மெடிக்கல் குப்பை சேகரிப்புக்கு அருகே இடமாற்றம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.