நடையனேரியில் பள்ளி, குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லும் ஓடையில் கழிவு நீர்
சிவகாசி: சிவகாசி அருகே நடையனேரியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லும் ஓடையில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். சிவகாசி அருகே நடையனேரி கிழக்குத் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குமிழங்குளம் கண்மாய் செல்லும் ஓடை செல்கிறது. இந்நிலையில் ஓடை முழுவதுமே கோரைப் புற்கள் ஆக்கிரமித்துள்ளது. தவிர ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர், மழைநீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் துர்நாற்றத்தில் அவதிப்படுவதோடு தொற்றுநோயாலும் பாதிக்கப்படுகின்றனர்.ஓடையின் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் ஓடையை விட்டு வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றது. எனவே ஓடையில் ஆக்கிரமித்துள்ள கோரைப் புற்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.