உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குல்லுார் சந்தை அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்

குல்லுார் சந்தை அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்

விருதுநகர் : விருதுநகர் அருகே குல்லுார் சந்தை அணைக்கு விருதுநகர், அதனை சுற்றிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் கலப்பதால் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. அணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குல்லுார் சந்தையில் கவுசிகா நதியின் குறுக்கே உபரி நீரை சேகரிப்பதற்காக 9 மீட்டர் உயரத்திற்கு அணை கட்டப்பட்டது. இந்த அணை முழு கொள்ளளவு எட்டி விட்டால் பிரதான கால்வாய்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மெட்டுக்குண்டு, சென்னல்குடி, கல்லுார் மார்ப்பட்டி, சூலக்கரை உள்ளிட்ட பல கிராமங்கள் பாசன வசதி பெறகிறது. விருதுநகர் நகராட்சி, ரோசல்பட்டி ஊராட்சி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வாறுகால், பாதாள சாக்கடை வழியாக கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு அணைப்பகுதிக்கு செல்லும் கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அவ்வப்போது முறையாக செயல்படாததாலும், ஊராட்சிகளின் கழிவு நீர் அப்படியே கால்வாயில் கலப்பதாலும் குல்லுார் சந்தை அணைக்கு வரும் தண்ணீர் மாசடைந்து வருகிறது. மேலும் கவுசிகா நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்காதால் மழைக்காலங்களில் நேரடியாக கழிவு நீர் அணைக்கு செல்கிறது. தற்போது கடந்த சில நாட்களாக விருதுநகர், சுற்றிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் கழிவு நீர் கலப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் தண்ணீர் மாசடைந்து பச்சை நிறத்தில் மாறியுள்ளது. நகர்பகுதிகளின் வழியாக அணைக்கு வரும் கால்வாய்கள் பெரும்பாலும் கழிவு நீர் கால்வாய்களாக மாறியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே குல்லுார் சந்தை அணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நீர்வரத்து கால்வாய்களை முழுவதும் சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை