தனியார் வாகனத்தில் டேங்கர் சேதமடைந்து குடிநீர் வீண்
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் குழாய் பதிக்காத பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் வாகனத்திலும் டேங்கர் சேதம் அடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசியில் பிச்சாண்டி தெரு, தட்டாவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது போன்ற பகுதிகளுக்கு மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனத்தில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப் படுகின்றது. இந்நிலையில் குடிநீர் கொண்டு செல்லும் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனம் பழுதடைந்த நிலையில் டேங்கரும் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்வதற்காக மாநகராட்சி சார்பில் தனியார் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாகனத்திலும் டேங்கர் சேதம் அடைந்து குடிநீர் வீணாகிறது. குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்ற மக்கள் சேதம் அடைந்த டேங்கரால் குடிநீர் வீணாவதால் அதிருப்தியில் உள்ளனர். எனவே மாநகராட்சி சார்பில் புதிய குடிநீர் வாகனத்தின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.