தீய பழக்கங்களை விலக்கி நல்லவற்றை கடைபிடிக்க வேண்டும்
ஸ்ரீவில்லிபுத்துார்: ''மாணவர்கள் அன்னப்பறவை போல் கெட்ட பழக்கங்களை விலக்கி நல்லவற்றை கடைபிடித்து போதைப் பொருள் அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் , என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தனம் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம்,சட்ட விரோத போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தனம் பேசுகையில், மாணவப் பருவம் என்பது மிகவும் அழகான பருவம். இது நமது வாழ்வில் திரும்பவும் வராது.எனவே, மாணவர்கள் நல்வழியில் நடக்க வேண்டும். நல்ல நண்பர்களை வைத்துக் கொள்ள வேண்டும். கூடா நட்பு கூடாது. போதைப் பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழான குற்றங்களில் இளைஞர்கள் சம்பந்தப்பட்டால் அவர்கள் வாழ்க்கையே போய்விடும்.எனவே, மாணவர்கள் அன்னப்பறவை போல் கெட்ட பழக்கங்களை விலக்கி நல்லவற்றை கடைபிடித்து போதைப் பொருள் அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார். விழாவில் முதல்வர் சுப சரவணன், டி.எஸ்.பி. ராஜா, மனநல மருத்துவர் இளவரசி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், போலீசார் போதைப் பொருளுக்கு எதிரான பேட்ஜ் அணிந்து உறுதி மொழி எடுத்தனர்.