மழை விடுமுறைக்கு வாட்ஸ் ஆப் குழுக்கள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில் அந்தந்த தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்து முடிவெடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் குழப்பம் ஏற்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் இடம்பெறும் வகையில் வாட்ஸ் ஆப் குழுக்களை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.நேற்று முன் தினம் நவ. 20ல் மாவட்டத்தில் பரவலான மழை பெய்தது. இதன் அளவு (மி.மீ.,ல்)ராஜபாளையம் 8, ஸ்ரீவில்லிபுத்துார் 10, சிவகாசி 18, விருதுநகர் 14, சாத்துார் 11.40, அருப்புக்கோட்டை 23, வெம்பக்கோட்டை 4, வத்திராயிருப்பு 5, காரியாபட்டி 9.60, பிளவக்கல் 4.60, கோவிலான்குளம் 22.60 என அதிகபட்சமாக திருச்சுழியில் 26.20 மி.மீ., அளவும் மழை பெய்துள்ளது. சராசரி மழையளவாக 13.05 மி.மீ., பதிவாகி உள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: நேற்று முன்தினம் மழை நிலவரம் படி 13.05 மி.மீ., தான் சராசரியாக பெய்துள்ளது. 20 மி.மீ., பெய்வது தான் இயல்பானமழையளவு. மற்ற மாவட்டங்களை விடவும் குறைவாகவே பெய்துஉள்ளது. எனவே தேவைக்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுப்பது தான் சரி என்று அவ்வாறு உத்தரவிடப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியர்களின் தொடர்பை பலப்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதிலும் சிரமங்கள் இருந்தால் பள்ளிக்கு என ஒரு எண் கொடுத்து அதை பெற்றோரிடம் வழங்கி விடுமுறை அறிவிப்பு பற்றி கேட்டு கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தனியார், உதவி பெறும் பள்ளிகள் இவ்வசதியை வைத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது. சில பள்ளி மேலாண்மை குழுக்கள் இதை முன்பிருந்தே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.