அரசு மருத்துவமனையில் பழுதாகும் லிப்ட்கள் சரியாகுமா; அடிக்கடி இடையில் நிற்பதால் பதறும் நோயாளிகள்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டது. இங்கு 640 படுக்கைகளில் இருந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப தற்போது 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. இங்குள்ள தரைதளத்தில் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி., ஸ்கேன் பரிசோதனைகள், வெளி நோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் இடம், முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகளுக்கான பொது மருத்துவம், நுரையீரல் மருத்துவப்பிரிவு, மருந்தகம், எக்கோ, இ.இ.ஜி., பரிசோதனை அறைகள், நுாலகம், இரண்டாவது தளத்தில் ஆய்வகம், சிறுநீரகம், தோல், கண், காது-மூக்கு-தொண்டை, மனநலம், பல் மருத்துவம் ஆகிய வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் செயல்படுகிறது. மேலும் மூன்றாவது தளத்தில் பொது மருத்துவம் ஆண், பெண் வார்டுகள், ஐ.எம்.சி.யூ., வார்டு, நான்காவது தளத்தில் அறுவை சிகிச்சை ஆண், பெண் வார்டுகள், டயாலிசிஸ் இருபாலருக்கான தனித்தனி வார்டுகள், ஐந்தாவது தளத்தில் எலும்பு அறுவை சிகிச்சை ஆண், பெண் வார்டுகள், கண் அறுவை சிகிச்சை வார்டு, ஆறாவது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, காது-மூக்கு-தொண்டை வார்டு, கண் அறுவை சிகிச்சை வார்டு ஆகியவை செயல்படுகிறது. இந்த வார்டுகளில் இருந்து நோயாளிகளை பரிசோதனைக்கு அழைத்து செல்ல ஏதுவாகமுன்னணி தனியார் நிறுவனத்தால் 6 லிப்ட்கள் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. ஆனால் லிப்ட்கள் அனைத்தும் அடிக்கடி பழுதாகி நடு வழியில் நிற்பதால், அதில் சிக்கி கொள்ளும் வயதானோர் செய்வதறியாது பரிதவிக்கின்றனர். இங்குள்ள லிப்ட்களில் முறையான பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. இதனால் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், அவர்களை பார்க்க வருபவர்கள் என அனைவரும் தினசரி பல முறை லிப்ட்களில் சிக்கி கொள்வது தொடர் கதையாக உள்ளது. அரசு மருத்துவமனைக்கு உள்ள லிப்ட் ஆப்பரேட்டர் பணியிடத்தை தமிழக அரசு நிரப்பாததால் தற்போது தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் லிப்ட் ஆப்பரேட்டர்களாக பணி புரிகின்றனர். மேலும் வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை லிப்ட்களில் பரிசோதனைக்கு தரைதளம், முதல் தளத்திற்கு அழைத்து வரும் போது லிப்ட் பழுதாகி நின்று விடுவதாலும், பெரும்பாலான நேரங்களில் இரு லிப்ட்களில் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாலும் நோயாளிகள், பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து லிப்ட்களையும் முறையாக பராமரித்து பழுதுகள் ஏற்படுதை முற்றிலும் தடுக்க வேண்டும். நோயாளிகள் வந்து செல்லக்கூடிய நேரத்தில் அனைத்து லிப்ட்களும் செயல்பாட்டில் இருக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.