படுமோசமான வணிக வளாகங்கள் புதியதாக கட்டப்படுமா
காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே படுமோசமாக இருக்கும் வணிக வளாக கடைகளை அப்புறப்படுத்தி புதிய வணிக வளாகம் கட்ட எடுக்க வேண்டும்.காரியாபட்டியில் 20 ஆண்டுகளுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. சரியான திட்டமிடல் இல்லாமல் நெருக்கடியாக கடைகளை கட்டினர். கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களில் பலர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கட்டடங்கள் படுமோசமாக இருந்ததால் அதிக செலவு செய்து மராமத்து பணிகள் மேற்கொண்டு சிலர் பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள கடைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, பூட்டி கிடக்கிறது. புழக்கம் இல்லாததால் அப்பகுதியில் மது அருந்துபவர்கள்,திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது, மது அருந்தி தகாத வார்த்தைகளில் பேசுவது, சமூக விரோத செயல்கள் நடப்பதால் தொடர்ந்து கடை நடத்துவதற்கு அஞ்சுகின்றனர். அந்த வழியாக போவோர் வருவோர் துர்நாற்றத்தால் முகம் சுளிக்கின்றனர். கட்டடமும் உறுதி தன்மையை இழந்து, எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் கடை நடத்தி வருகின்றனர். விபத்திற்கு முன் பழைய கட்டடங்களை அப்புறப்படுத்தி, திட்டமிடலுடன் புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.