யானை தந்தங்கள் வைத்திருந்த விவகாரம்: நடிகர் மோகன்லால் மீது கோர்ட்டில் வழக்கு
திருச்சூர்: பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில், விதிமுறைகளை மீறி, யானை தந்தங்களை வைத்திருந்ததாகக், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வனத்துறை அதிகாரிகளையும் விசாரிக்கவேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ், மலையாள மொழி திரைப்படங்கள் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மோகன்லால். இவருக்குச் சொந்தமான கொச்சி, சென்னை உட்பட, பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், இவருக்கு நெருக்கமானவர்களது வீடுகள், அலுவலகங்களில், சமீபத்தில் ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது கேரளா கொச்சி தேவராப் பகுதியில் உள்ள, அவரது வீட்டில் இருந்து இரு யானை தந்தங்களை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை உண்மையிலேயே யானை தந்தங்கள் தானா அல்லது போலியா என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்தனர். விசாரணையில், அவை ஒரிஜினல் யானை தந்தங்கள் என, தெரிந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், யானை தந்தங்களை, மோகன்லால் தன் வீட்டில், முறைகேடாக வாங்கி வைத்திருந்தாரா என்பது குறித்து, விஜிலென்ஸ் விசாரணை நடத்தப்படவேண்டும் என, பொதுநல ஆர்வலர் ஜோசப் என்பவர், திருச்சூர் விஜிலென்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு வரும், 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இப்பிரச்னையில் வனத்துறை அதிகாரிகளின் பங்கு குறித்தும், விசாரணை நடத்தப்படவேண்டும் என, ஜோசப் தன் மனுவில் கோரி உள்ளார்.