சென்னை:''அனைத்துக் காலங்களிலும், இணையதள வசதியை பயன்படுத்தி, வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது குறித்து, உரிய ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது, 'இணையதளம் மூலம் விண்ணப்பித்து, வாக்காளர் அடையாள அட்டையை பெற, அரசு நடவடிக்கை எடுக்குமா?' என்று, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படாமல், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் ஆகியோருக்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை தயாரித்து, வினியோகிப்பது என்பது, தொடர்ந்து நடக்கும் ஒரு நடைமுறை.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த காலங்களில், தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, கோரிக்கைகளும், மறுப்புரைகளும் இடம்பெறும் கால கட்டத்தில் மட்டும், இணையதள வசதி மூலம், வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்கும் வசதி செய்துத் தரப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். மற்ற காலங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
உரிய ஆய்வுக்குப்பின், அவர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்துக் காலங்களிலும், இணையதள வசதியை பயன்படுத்தி, வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது குறித்து, முதல்வருடன் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.