பிறந்தநாள் பரிசு வழக்கு: ஜெ., விடுவிப்பு
சென்னை: பிறந்தநாள் பரிசு வழக்கில் இருந்து அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை விடுவித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி பாட்ஷா உத்தரவிட்டார்.
கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, தனது பிறந்தநாளின் போது இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு டி.டி.,க்கள் பெற்றதாக அவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சென்னை சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.என். பாட்ஷா, குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ., காலதாமதமாக தாக்கல் செய்ததற்கு எவ்வித காரணத்தையும் கூறவில்லை என்றும், வழக்கை மனுதாரர் எவ்விதத்திலும் தாமதப்படுத்தவில்லை என்பதால் ஜெ., மனுவை ஏற்று இவ்வழக்கை ரத்து செய்து உத்தரவிடுவதாக தெரிவித்தார். மேலும் இவ்வழக்கில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.