இலவச திட்டங்களை எதிர்த்து வழக்கு: நவ.15ம் தேதி இறுதி விசாரணை
புதுடில்லி: தமிழக அரசின் இலவசத் திட்டங்களை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவை, சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசு சார்பில், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றை, மக்களுக்கு இலவசமாக வழங்குவதை எதிர்த்து, வழக்கறிஞர் சுப்ரமணிய பாலாஜி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இலவசங்கள் வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'தேர்தலில் பங்கேற்கும் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும், தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு, தங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள திட்டங்களை செயல்படுத்த உரிமை உள்ளது. அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் முந்தைய தி.மு.க., அரசு, இலவசமாக கலர் 'டிவி' வழங்கியதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை, சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் சுப்ரமணிய பாலாஜி வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 15ம் தேதி, நடைபெறும். அப்போது, இலவச கலர் 'டிவி' வழங்குவதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும். அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றும்படி உத்தரவிடுகிறோம்' என்றனர்.