சேலம்: சேலம் மாநகராட்சியில், மூன்று முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட, அஸ்தம்பட்டி பகுதி தி.மு.க., செயலாளர் நடேசன், கட்சியில் இருந்து விலகினார்.சேலம் மாநகர அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் நடேசன். மாநகராட்சி, 14வது வார்டி, தி.மு.க., சார்பில் மூன்று முறை போட்டியிட்டு, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தார். 2006ம் ஆண்டு மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.சமீபத்தில் வெளியான, தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், நடேசன் பெயர் இடம் பெறவில்லை. அதிருப்தி அடைந்த நடேசன், சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்தார்.
நேற்று, தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பினார். தொடர்ந்து, அஸ்தம்பட்டி மண்டலத்தில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்தார்.ராஜினாமா குறித்து நடேசன் கூறியதாவது:கட்சியில் பல ஆண்டாக உழைத்திருக்கிறேன். திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளேன். கட்சியில் இருந்து வெற்றி பெற்றால், அந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக கூறுவார்கள். அதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு கூறினார்.நடேசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க., வில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.