| ADDED : மே 03, 2024 01:35 AM
சென்னை:'ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் நசிமுதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இணையவழி சூதாட்டம், வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் புரிவோருக்கு மூன்று மாதங்கள் வரை சிறை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டம் அல்லது வாய்ப்பு அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களும் சட்டப்படி தடை செய்யப்பட்டு உள்ளன.நேரடியாக அல்லது மறைமுகமாக, பணம் அல்லது பிற வழிகளில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் வகையில், மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட, எந்தவொரு ஊடகத்திலும், விளம்பரமோ, அறிவிப்போ செய்யக் கூடாது.அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடுவோருக்கு, ஓராண்டு சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை, 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.தடை செய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகத் தளங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, நுகர்வோர் ஆணையமும் அறிவித்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.