வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேட்டி: திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கட்சி துவங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கட்சி மாநாடு உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகள் எதுவாகினும், அதற்காக அனுமதி கேட்டால் நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். அனுமதி கொடுப்பதுதான் வழக்கம்; மரபு. எங்கள் ஆட்சி காலத்தில், அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தவும், மாநாடு நடத்தவும் அனுமதித்தோம்.ஆனால், நடிகர் விஜயை கண்டு தி.மு.க., பயப்படுகிறது. அதனாலேயே, அவர் நடத்தும் மாநாட்டுக்காக பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்துகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், தொழில் முதலீடுகள் ஈர்க்கும் விஷயத்தில் வெள்ளை அறிக்கை கேட்டார். ஆனால், இப்போது தொழில் முதலீடுகள் ஈர்க்கும் விஷயத்தில் எதிலுமே வெளிப்படைத்தன்மை இல்லை. அதற்காக, இப்போது எங்கள் தரப்பிலும், முதல்வர் ஸ்டாலினிடம் தொழில் முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்கப்படுகிறது. ஆனால், பதில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.