போதைப்பொருள் கடத்தல் 10,000 வங்கி கணக்குகள் முடக்கம்
சென்னை:போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சிக்கிய, 10,000 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஏழு ஆண்டுகளாக, தமிழகத்தை, 'பூஜ்ஜியம் கஞ்சா சாகுபடி மாநிலம்' என்ற நிலையில் பராமரித்து வருகிறோம்.ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான், தமிழகத்திற்கு அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது.மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் பின்னணியில், இலங்கையைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் உள்ளனர். இவர்களில், கஞ்சிபாணி இம்ரான் முக்கியமானவர். இவர் குறித்து துப்பு துலக்கி வருகிறோம்.மேலும், ஐந்து ஆண்டுகளாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, 42,500 பேரின் பட்டியல் தயாரித்து கண்காணித்து வருகிறோம்.இவ்வழக்கில் கைதான நபர்கள் ஜாமினில் வெளிவந்தபின், மீண்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடாமல் இருக்க, இவர்களின் அசையா சொத்துக்கள், வங்கி இருப்புகளையும் முடக்கி வருகிறோம். அந்த வகையில், மூன்று ஆண்டுகளில், லட்சக்கணக்கில் இருப்பு வைத்துள்ள, 10,000 பேரின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.