கிராமங்களில் மாரடைப்பு ஒரு வாரத்தில் 174 பேர் பாதிப்பு
சென்னை: இதய நோய் அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புறங்களில் கடந்த ஒரு வாரத்தில், 174 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுஉள்ளனர்.உலகளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளம் வயதில் உள்ளவர்களுக்கும், இதய நோய் பாதிப்பு அதிகரித்து, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மாரடைப்பு ஏற்படும்போது, முதல் ஒரு மணி நேரம், மிகவும் முக்கியமானது. 'இதயம் காப்போம்'
அந்த ஒரு மணி நேரத்திற்குள், உரிய அவசர சிகிச்சை பெற முடிந்தால், பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற முடியும். எனவே, தமிழகத்தில் உள்ள ஆரம்ப மற்றும் வட்டார சுகாதார நிலையங்களில், 'இதயம் காப்போம்' திட்டத்தை, 2023ல் அரசு செயல்படுத்தியது. மாரடைப்புடன் வருவோருக்கு, அதை தடுக்கும் வகையில், 'ஆஸ்பிரின் 150 எம்.ஜி., - 2 மாத்திரைகள்; க்ளோபிடோக்ரல் 75 எம்.ஜி.,- 4 மாத்திரைகள், அடோர்வாஸ்டாடின் 10 எம்.ஜி., - 8 மாத்திரைகள் என, 14 மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கிராமப்புறங்களில், 174 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:உணவு முறை போன்ற காரணங்களால், இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தொடர் சிகிச்சை
திடீரென மாரடைப்பு ஏற்படும் நோயாளிக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், இதயம் காப்போம் திட்டம் துவக்கப்பட்டது. துவக்கப்பட்டதில் இருந்து, இதுவரை, 15,019 பேர் பயன் அடைந்துள்ளனர். முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, தொடர் சிகிச்சைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில், சிகிச்சை பெற்றவர்களில், 90 சதவீதத்திற்கு மேல் காப்பாற்றப்பட்டுள்ளனர். சிலர், இணை நோய் போன்றவற்றால் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.