மதுரை:போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 2486 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை ஒத்தக்கடையில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தவறிவிட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். ஐயப்பன் நகர், நீலமேக நகரில் போலீஸ் 'அவுட் போஸ்ட்' அமைக்க வேண்டும். போதையில் வாகனம் ஓட்டுவோர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையின்போது, 'போதைப்பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.ராஜசேகர் அமர்வு நேற்று விசாரித்தது.அரசு தரப்பு: ஓபியம், ெஹராயின் உட்பட பல்வேறு போதைப் பொருள்கள் நேபாளம், உ.பி.,ராஜஸ்தான், ம.பி.,வழியாக தமிழகத்திற்கு கடத்தப்படுகின்றன. ஒடிசா, பீகார், மேற்குவங்கம், தெலுங்கானாவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுகிறது. இங்கிருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறது. 2021-24 ல் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் உட்பட பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த 2486 பேர் கைதாகியுள்ளனர். பலரது சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 3719 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்டந்தோறும் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2021 ல் 20 ஆயிரத்து 323 கிலோ, 2022 ல் 27 ஆயிரத்து 208.5 கிலோ, 2023 ல் 23 ஆயிரத்து 468.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒத்தக்கடையில் 2019 முதல் 2024 ஏப்.,வரை 49 போதைப் பொருள் வழக்குகளில் 78 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 1070.670 கிலோ கிராம் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள்: அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். சில வழிகாட்டுதல்கள் உத்தரவாக பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.