ஒரு மாதத்தில் 26 சிறுமியருக்கு பாலியல் வன்கொடுமை: சீமான்
சென்னை: நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:பெண்களை அடக்கி, ஒடுக்கும் விதமான குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. அதன்படி, பள்ளி சிறுமியர் முதல், கல்லுாரி செல்லும் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சமூக பேரவலம் அதிகரித்து வருகிறது.ஒரே நாளில், ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளி சிறுமியர் உட்பட, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 26 பள்ளி சிறுமியருக்கு பாலியல் வன்கொடுந்துயரங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க, மாநில சமூக நலத்துறை, மாநில மகளிர் ஆணையம், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றத்தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பல இருந்தும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.இவற்றுக்கு அடிப்படை காரணமாக இருப்பது, அரசு விற்கும் மதுவும், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனையும் தான். இளம் தலைமுறையை சீரழிக்கும் மது போதையை ஒழிப்பதன் வாயிலாக மட்டுமே, பெண்களின் பாதுகாப்பான நல்வாழ்வை உறுதி செய்ய முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.