உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

நிதி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

சென்னை:''மத்திய அரசின் தொடர் நிதி குறைப்பால், தமிழக அரசுக்கு 3.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், நேற்று 16வது நிதி ஆணையம் தொடர்பாக, மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. அதில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

நிதியுதவி

மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பகிர்ந்தளிப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளது. சமுதாயத்தின் வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக நலன் உள்ளிட்ட, பொது சேவைகளை வழங்கும் பெரும்பாலான பொறுப்புகள், மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.ஆனால், வருவாய் உருவாக்கும் பெரும்பான்மையான அதிகாரங்களை, மத்திய அரசு தன்னிடம் வைத்துள்ளது. இந்தச் சூழலில், அடுத்தடுத்த நிதி ஆணையங்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே, நிகர வருவாயின் பங்கீட்டை அதிகரிக்க முயன்றன.கடந்த 15வது நிதி ஆணையம் 41 சதவீதம் பரிந்துரைத்தாலும், முதல் நான்கு ஆண்டுகளில், மொத்த வரி வருவாயில், 31.42 சதவீதம் மட்டுமே பயனுள்ள அதிகாரப் பகிர்வாக இருந்தது.ஒரு புறம் அதிகாரப் பகிர்வு குறைவாக உள்ளது. மறுபுறம் மத்திய அரசு திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதியுதவி குறைக்கப்பட்டு, மாநில அரசின் நிதியுதவி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது, மாநில அரசின் நிதிச்சுமையை அதிகரித்து உள்ளது.மத்திய அரசு வரி பகிர்வில், 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மானியங்கள் குறைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க, ஒரு வழிமுறையை ஆணையம் உருவாக்க வேண்டும்.

முழு திறன்

தமிழகம் தொடர்ச்சியாக, நிடி ஆயோக் அமைப்பால் தண்டிக்கப்படுகிறது. ஒன்பதாவது நிதி ஆணையம் இருந்த போது, 7.93 சதவீதமாக இருந்த நிதி பகிர்வு, 15வது நிதி ஆணையத்தால், 4.07 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர் நிதி குறைப்பால், தமிழக அரசுக்கு 3.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, நிலுவையில் உள்ள கடனில் 43 சதவீதம். இந்நிதி குறைப்பு மாநிலத்திற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியதோடு, மாநிலம் தன் முழு திறனை எட்டுவதற்கான வாய்ப்பை இழக்க வைத்துள்ளது.இவ்வாறு அமைச்சர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை