| ADDED : மே 28, 2024 12:33 AM
திருப்பாச்சேத்தி : குமரி மாவட்டம், நாகர்கோவில், மந்தாரபுதுார் சேகர் மகள் மஞ்சு, 27; கோவை தனியார் கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்தார். இந்த கிளினிக்கிற்கு அருகில் உள்ள பேக்கரியில் திருப்பாச்சேத்தி அருகே நாட்டாகுடியை சேர்ந்த சந்திரசேகரன் பணிபுரிந்தார்.இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். மஞ்சு கர்ப்பம் அடைந்ததால், அவரை சொந்த ஊரான நாட்டாகுடிக்கு கணவர் அழைத்து வந்தார். இங்கு குழந்தை பிறந்து நான்கு மாதமே ஆன நிலையில், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மே 21ல் குழந்தையுடன் மஞ்சு மாயமானார்.இரவில் சந்திரசேகரனிடம் பேசிய அவர், 'குழந்தையை தேட வேண்டாம்; கோவில் பின்புறம் கட்டை பையில் குழந்தையை வைத்துள்ளேன்' என, கூறியுள்ளார். மே 22ம் தேதி சந்திரசேகரன் அங்கு சென்று பார்த்த போது, குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இறந்த குழந்தையை போலீசுக்கு தெரிவிக்காமல் சந்திரசேகரன், அவரது தாய் காளிமுத்து புதைத்து விட்டனர். இந்த விபரம் போலீசுக்கு தெரியவே மே 23ல் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. தலைமறைவான மஞ்சுவை தென்காசி மாவட்டம், ஆயக்குடியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், மஞ்சுவிற்கு ஏற்கனவே நாகர்கோவிலை சேர்ந்த ஜெபின் ஜோஸ்-- என்பவருடன் திருமணமாகி, 6 வயதில் மகன் இருப்பதும், இரண்டாவதாக சந்திரசேகரனை காதல் திருமணம் செய்ததும், மூன்றாவதாக ஆயக்குடியை சேர்ந்த ரூபன் என்ற லுார்து மைக்கேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.அவரை திருமணம் செய்வதற்காக சந்திரசேகரனை பிரிந்து சென்ற போது, குழந்தையை கட்டைபையில் வைத்து காட்டிற்குள் துாக்கி வீசியுள்ளார். அப்போது தலையில் அடிபட்டு குழந்தை இறந்துள்ளது. குழந்தையை கொன்ற மஞ்சு, போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை புதைத்த சந்திரசேகரன், காளிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.