பனிப்பொழிவால் பிரச்னை 5 விரைவு ரயில்கள் தாமதம்
சென்னை:இணை ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சென்னை - ஹவுரா உட்பட ஐந்து விரைவு ரயில்கள், பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன. வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில், கடும் குளிர் நிலவுகிறது. இதனால், பயணியர் பாதுகாப்பு கருதி, சில வழித்தடங்களில் வேகத்தை குறைத்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, விரைவு ரயில்களின் இணை ரயில்கள் தாமதமாக வந்தடைகின்றன.சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்கம் மாநிலம் சாலிமார் கோரமண்டல் விரைவு ரயில், ஏழரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு, 7:00 மணிக்கு புறப்பட வேண்டிய ஹவுரா விரைவு ரயில், நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.இதேபோல, புதுச்சேரி - ஆந்திரா மாநிலம் காக்கிநாடா போர்டு ரயில் இரண்டு மணி நேரமும், கன்னியாகுமரி - அசாம் மாநிலம் திப்ரூகர் ரயில் ஒன்றரை மணி நேரமும், விழுப்புரம் - தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் சிறப்பு ரயில், இரண்டு மணி நேரமும் தாமதமாக இயக்கப்பட்டன.