வருவாய் துறையினருக்கு 51 புதிய வாகனங்கள்
சென்னை:வருவாய் துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட 51 வாகனங்களை, முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.வருவாய் துறையில், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நான்கு துணை கலெக்டர்கள், 47 தாசில்தார்கள் பயன்பாட்டிற்காக, 4.57 கோடி ரூபாய் மதிப்பில், 51 பொலிரோ ஜீப்புகள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வருவாய் துறையிடம் ஒப்படைப்பதற்கு அடையாளமாக, தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பச்சைக்கொடி அசைத்து, துவக்கி வைத்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக இணை சார் -- பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, ஆண்டுக்கு 10,000ரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவாகி, 53 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதிவுத்துறை சார்பில், தஞ்சாவூர் - ஒரத்தநாடு; திருவாரூர் - திருத்துறைப்பூண்டி, வலங்கைமான்; மதுரை - திருமங்கலம்; காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதுார்; திருப்பூர் - தாராபுரம்; துாத்துக்குடி - எட்டையபுரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம்; விருதுநகர் - ராஜபாளையம்; புதுக்கோட்டை - விராலிமலை; கரூர் - குளித்தலை என, 12 இடங்களில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. அவற்றை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரன், மூர்த்தி, சாமிநாதன், தலைமை செயலர் முருகானந்தம், வருவாய் துறை செயலர் அமுதா, நிர்வாக ஆணையர் சாய்குமார், பதிவுத்துறை செயலர் குமார் ஜெயந்த், தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.