சென்னை: தமிழகத்தில் கோடை மழை 58 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரியில் இன்று (மே 11) முதல் வரும் மே 15ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று( மே 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை (மே 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோடை மழை
மார்ச் 1ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமான கோடை மழை 83.4 மி.மீ., பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 35.2 மி.மீ தான் பதிவாகியுள்ளது. இதனால் கோடை மழை 58 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.