| ADDED : மே 22, 2024 10:58 PM
சென்னை:அனைத்து, 'மெமு' வகை ரயில்களிலும் அடுத்த மாதம் முதல் தலா நான்கு கழிப்பறை வசதி அமைக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மெமு ரயிலில் ஒன்பது பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். குறுகிய துார பயணியர் ரயிலாக இயக்கப்படுகிறது. இதில், கழிப்பறை வசதி உண்டு. சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, காட்பாடி - அரக்கோணம்; சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், திருத்தணி - சென்ட்ரல், பித்ரகுண்டா - சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில், 12க்கும் மேற்பட்ட மெமு வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஆனால், மெமு ரயிலில் போதிய அளவில் கழிப்பறை வசதி இல்லாமலும், பெரும்பாலான நேரங்களில் துாய்மை இன்றி துர்நாற்றம் வீசுகிறது என பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் மொத்தம், 12 மெமு வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒன்பது மெமு ரயில்களில் தலா நான்கு கழிப்பறை வசதியும், மூன்று மெமு ரயில்களில் தலா இரண்டு கழிப்பறை வசதியும் உள்ளன. இவற்றில் கூடுதலாக நான்கு கழிப்பறை வசதி அமைக்க உள்ளோம். அடுத்த மாதம் முதல், அனைத்து மெமு வகை ரயில்களிலும் தலா நான்கு கழிப்பறை வசதி அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து ரயில் பயணியர் கூறியதாவது: ஒன்பது பெட்டிகள் கொண்ட மெமு வகை ரயில்களில் பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். போதிய இடம் இல்லாததால், மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இவற்றில் கழிப்பறைகளும் போதிய அளவில் சுத்தம் இன்றி இருக்கின்றன; துர்நாற்றம் வீசுகின்றன. எனவே, மெமு ரயில்களில் தேவைக்கு ஏற்ப, ஒவ்வொரு பெட்டியிலும் தலா இரண்டு கழிப்பறை வசதி வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.