வரும் 8ல் அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை; 'குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய தி.மு.க., அரசை கண்டித்து, மார்ச் 8ம் தேதி, திருநெல்வேலியில் அ.ம.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் தினகரன் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் நள்ளிரவு மட்டுமின்றி, பட்டப்பகல் உட்பட 24 மணி நேரங்களிலும் அரங்கேறும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், வழிப்பறி சம்பவங்களும், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக திகழ்வதை உணர்த்துகிறது.கல்வியை கற்றுத் தரும் அரசு பள்ளிகள், பஸ் நிலையங்கள் என, அனைத்து இடங்களிலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இவற்றை ஒடுக்க வேண்டிய காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக செயல்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி காலை 9:00 மணிக்கு, அ.ம.மு.க., சார்பில், திருநெல்வேலி ரயில்வே சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.