அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை
கோவை:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கோவை அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., 'அம்மன்' அர்ஜுனன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன். இவர், 2016 முதல் 2022க்கு உட்பட்ட காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக, 2.75 கோடி சொத்து சேர்த்ததாக, இவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக, அவரது மனைவி விஜயலட்சுமி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு பதிவு
இதன் அடிப்படையில், நேற்று காலை, 6:00 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் எட்டு போலீசார், செல்வபுரம், அசோக் நகரில் உள்ள அம்மன் அர்ஜுனன் வீட்டில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி, விளக்கம் கேட்டனர்.சோதனை குறித்து தகவலறிந்து, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், ஜெயராம், தாமோதரன், செல்வராஜ், கந்தசாமி, ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் அம்மன் அர்ஜுனன் வீட்டிற்கு வந்தனர். தொண்டர்கள், 100க்கும் மேற்பட்டோர், வீட்டின் முன் கூடி, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.அனைவருக்கும் டீ, காபி, ஜூஸ், ஸ்நாக்ஸ், காலை உணவு, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. தொண்டர்கள், நிர்வாகிகள் அமர பந்தல் அமைத்து, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.கடந்த, 2016ன் படி அம்மன் அர்ஜுனன் சொத்து மதிப்பு, 2.30 கோடி ரூபாயாக இருந்தது. 2022ம் ஆண்டில் 5.96 கோடியாக உயர்ந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் அவர், 3.87 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அதில், 2.97 கோடி செலவானதாக கணக்கு காட்டியுள்ளார். இவ்வகையில் அவரது சொத்தின் மதிப்பு 2022 மார்ச் 31ல், 90 லட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், சொத்து மதிப்பு, 3.66 கோடியாக காட்டப்பட்டுள்ளது. இதனால், 2.75 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒத்துழைப்பு
அம்மன் அர்ஜுனன் கூறுகையில், ''எனக்கு எந்தவித நோட்டீசும் கொடுக்கவில்லை. நான் காலை நடைபயிற்சி சென்றிருந்தேன். என்னை போனில் அழைத்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்கின்றனர். ''எப்போதோ எதிர்பார்த்தேன்; இப்போதுதான் வந்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன்,'' என்றார்.
யார் இந்த அம்மன் அர்ஜுனன்?
மதுரையில் இருந்து, கோவைக்கு தொழில் நிமித்தமாக வந்தவர். 'அம்மன்' என்ற பெயரில் மசாலாக்கள் தயார் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். அப்போது, கடைக்காரர் ஒருவர் மூலமாக, முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி அறிமுகம் கிடைத்தது. அதுதான் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு துவக்கமாக அமைந்தது. முதலில், 45வது வார்டு செயலராக இருந்தார். பழைய, 85வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து, பகுதி செயலராக இருந்து, கோணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவி வகித்தார். 2016ல், கோவை தெற்கு தொகுதியில் முதல்முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2021ம் ஆண்டு கோவை வடக்கு தொகுதியில் இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ.,வானார். அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலராகவும் உள்ளார்.அர்ஜுனனின் மகன் கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராக இருந்தார். அர்ஜுனனின் தொழில், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்டவற்றை, கோபாலகிருஷ்ணன் கவனித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், உடல்நலக் குறைவால் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
மனைவி நிறுவனத்திலும் சோதனை
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில், அர்ஜுனன் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிறுவனத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ஜெனியூன் செல் கார்ப் பிரைவேட் லிமிடெட் என்ற இந்நிறுவனத்தில், தேங்காய் தொட்டியில் இருந்து கார்பன் தயாரிக்கப்படுகிறது.இந்நிறுவனத்தில், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில், ஐந்து அதிகாரிகள் காலை, 8:30 முதல் மாலை, 4:00 மணி வரை, சோதனை நடத்தினர். சோதனையின் போது எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.
அம்மன் அர்ஜுனன்
சொத்து விபரம்(2016 -- 2024) 21.5.2016 அசையும், அசையா சொத்துக்கள்ரூ.2,30,67,10931.3.2022 அசையும், அசையா சொத்துகள் ரூ.5,96,70,9082016 - 2022 மொத்த வருவாய் ரூ.3,87,38,5422016 - 2022 செலவுகள் ரூ.2,97,13,7952016 - 2022 சேமிப்பு ரூ.90, 24,8372016 - 2022அசையும், அசையா சொத்து மதிப்பு ரூ.3,66,03,7992016 - 2022 வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து மதிப்பு ரூ.2,75,78,962