உடுமலை:கேரள மாநிலம், மறையூர் காந்தலுார் பகுதியில் ஆப்பிள் அறுவடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணியர் உற்சாகமடைந்து உள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, கேரள மாநிலம் மறையூர், காந்தலுார் மற்றும் மூணாறு, முக்கிய சுற்றுலா மையமாக உள்ளது. குளிர் சீதோஷ்ண நிலை காணப்படும் மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் ஆப்பிள், காந்தலுார் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இங்குள்ள, பெருமலை, குளச்சிவயல் உள்ளிட்ட பகுதிகளில், ஆண்டு முழுதும் குளிர் சீதோஷ்ண நிலை காணப்படுவதால், 100 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு, மே மாதம் துவங்கி, ஆக., வரையிலும் ஆப்பிள் அறுவடை சீசன் காலமாகும். தற்போது, இப்பகுதிகளில் ஆப்பிள் அறுவடை துவங்கியுள்ளதோடு, கிலோ, 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே ஆப்பிள் தோட்டங்கள் உள்ள நிலையில், காந்தலுாரில் உள்ள ஆப்பிள் தோட்டத்தை, சுற்றுலா பயணியர் உற்சாகமாக சுற்றிப் பார்த்து, மெழுகு பூச்சு, பதப்படுத்துதல் என, எந்த கலப்பும் இல்லாமல், இயற்கையாக கிடைப்பதால், ஆப்பிள்களை வாங்கியும் செல்கின்றனர்.