உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு நிலக்கரி எடுத்து வர 21 சரக்கு ரயில்கள் இயக்க ஒப்புதல்

தமிழகத்திற்கு நிலக்கரி எடுத்து வர 21 சரக்கு ரயில்கள் இயக்க ஒப்புதல்

சென்னை: கோடை கால மின் தேவையை சமாளிக்க, தமிழகத்திற்கு அதிக நிலக்கரியை அனுப்புவதற்காக, ஒடிசாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து, அம்மாநிலத்தின் பாரதீப் துறைமுகத்திற்கு, 21 சரக்கு ரயில்களை இயக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று முதல் இந்த கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு, 72,000 டன் நிலக்கரி தேவை.

கோடை காலம்

இந்த நிலக்கரி, ஒடிசா மாநிலத்தில் உள்ள, 'தால்சர், ஐ.பி., வேலி' போன்ற சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு, சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டு, அம்மாநிலத்தின் பாரதீப் துறைமுகத்திற்கு அனுப்பப்படுகிறது.அங்கிருந்து, கப்பலில் நிலக்கரி ஏற்றி, தமிழகத்திற்கு எடுத்து வரப்படுகிறது. தேவையான அளவுக்கு சரக்கு ரயில்கள் இயங்குவதில்லை. இதனால், ஒரு சரக்கு ரயிலில் சராசரியாக, 3,750 டன் என, தினமும், 15 ரயில்களில் சராசரியாக, 55,000 டன் அளவுக்கு தான் நிலக்கரி, துறைமுகத்திற்கு அனுப்பப்படுகிறது.எனவே, அனல் மின் நிலையங்களில் தினமும், 3,000 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ளது. இதனால், தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை, 22,000 மெகா வாட்டை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, அதிக மின்சாரம் தேவைப்படுவதால், அனல் மின் நிலையங்களில் முழு அளவில் மின் உற்பத்தி செய்ய மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஒப்புதல்

எனவே, தமிழகத்திற்கு கூடுதலாக நிலக்கரியும், விரைந்து எடுத்து வர கூடுதல் சரக்கு ரயில்களும் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு, மின் வாரியம் சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, தமிழகத்திற்கு, 21 சரக்கு ரயில்களை ஒதுக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நேற்று முதல் இந்த கூடுதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு, 78,000 டன் நிலக்கரி அனுப்பப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மின் வாரிய அனல் மின் நிலைய வளாகங்களில், 23 நாட்களுக்கு தேவையான, 17 லட்சம் டன் நிலக்கரி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bye Pass
மார் 02, 2025 02:12

சோலார் காற்றாலை மின் தயாரிப்பை அதிகரிக்கலாம் சிறிய நியூக்ளியர் மின் தயாரிப்பை அதிகரித்து சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை குறைக்கலாம்


சமீபத்திய செய்தி