ஓசூர் : தமிழகத்தில் பல இடங்களில் நகர மற்றும் கிராமப்புறங்களில் கழிவுநீர் கலந்த சுகாதாரமில்லாத குடிநீர் பருகியதால், வாந்தி, பேதி ஏற்பட்டு, ஒன்பது பேர் பலியாகினர். அதே நேரம் ஓசூரில், அசாம் மாநில பெண் ஒருவர் வாந்தி, பேதியால் இறந்தது மூடி மறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி சின்ன பழனியப்பா நகரில் வசித்த, அசாம் மாநிலத்தை சேர்ந்த சில்பிதாஸ், 20, என்ற பெண் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதித்து கடந்த, 13ல் இறந்தார். இதை மாநகராட்சி நிர்வாகம் மறைத்த நிலையில், தற்போது இந்த விவகாரம் கவுன்சிலர்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, அப்பகுதி மாநகராட்சி குழாய் ஆய்வாளர் சீனிவாசனிடம், மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தியது. அவர் சரியான கண்காணிப்பு பணியை மேற்கொள்ளாமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, 13ம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதே அதிகாரிகளுக்கு தெரியாமல், அவரை மீண்டும் பணிக்கு அழைத்ததால், அவர் நேற்று பணிக்கு திரும்பினார். இதுபற்றி, மாநகராட்சி கமிஷனர் சினேகாவிடம் கேட்டபோது, “சீனிவாசன் சம்பவ நாளிலேயே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளது குறித்து விசாரிக்கிறோம்,” என்றார்.மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரித்தபோது, 'மாநகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. மேன்பவர் தேவை என்பதால், குழாய் ஆய்வாளர் சீனிவாசன் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்' என்றனர்.