புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள முள்ளுர், வாகவாசல், திருக்கட்டளை, திருமலைராயர்சமுத்திரம், தேக்காட்டூர், கவிநாடு மேலவட்டம், கவிநாடு கீழவட்டம், 9ஏ நத்தம் பண்ணை, 9பி நத்தம் பண்ணை, திருவேங்கைவாசல், வெள்ளனுார் ஆகிய 11 ஊராட்சிகள், புதுக்கோட்டை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளன.இதற்கு, இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் போராட்டம் உட்பட பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று, 11 ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின், கலெக்டர் அலுவலகம் முன்பு 11 ஊராட்சியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி ஒரு சிலரை மட்டும், கலெக்டர் மெர்சி ரம்யா-விடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.மாநகராட்சியாக தங்களது ஊராட்சிகளை மாற்றினால், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும்; வரி உயரும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் கூறினர்.