சென்னை:திருமணம் செய்ய மறுத்த நண்பரின் குழந்தையை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை, முன்கூட்டி விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவருடன், பூவரசி என்ற பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர்; மூன்றரை வயதில் குழந்தை இருந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசி கூற, அதற்கு அவர் மறுத்துஉள்ளார். ஆத்திரமடைந்த பூவரசி, நண்பரின் மூன்றரை வயது குழந்தையை கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து பஸ்சில் விட்டு சென்றார். இந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2011 பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவரசி மேல்முறையீடு செய்தார். ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. சென்னை புழல் சிறையில் பூவரசி அடைக்கப்பட்டார்.மறைந்த முதல்வர் அண்ணாதுரையின், 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை பூர்த்தி செய்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான உத்தரவை, 2021 நவம்பரில் உள்துறை பிறப்பித்தது. தன் மனைவி பூவரசியை விடுவிக்கக் கோரி, அரசிடம் அவரது கணவர் மணிகண்டன் மனு அளித்தார். கொடுங்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அரசு நிராகரித்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். மனுவை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.மனோகரன் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கொடுங்குற்றத்தில் ஈடுபட்டதால், முன்கூட்டியே விடுதலைக்கு பரிந்துரைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, அவரது நடத்தையை தெரிந்துகொள்ள, நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையை கோரினோம். பூவரசியின் விடுதலைக்கு சாதகமாக அவர் பரிந்துரைத்துள்ளார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்தால், உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். தனியார் நிறுவனத்தில் பூவரசி பணியாற்றியதால், விடுதலைக்கு பின் பணி கிடைப்பதற்கான தகுதி உள்ளது. தேவையான கவனிப்பு, பாதுகாப்பு அளிக்க, அவரது கணவரும் தயாராக உள்ளார். யாருக்கும் ஆபத்தில்லை
மேலும், 14 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையை பரிசீலிக்கும் போது, இவரை முன்கூட்டியே விடுவிப்பதால், சமூகத்தில் எதிர்மறை விளைவு ஏற்படாது; வேறு யாருக்கும் ஆபத்தும் வராது.எனவே, மனுதாரரின் மனுவை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இரண்டு நாட்களில் பூவரசியை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.