உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்காச்சோளம் உற்பத்தியை பெருக்க கறிக்கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை

மக்காச்சோளம் உற்பத்தியை பெருக்க கறிக்கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை

பல்லடம் : 'தமிழகத்தில், மக்காச்சோள உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவான பி.சி.சி.,யின் செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில், விவசாயத்துக்கு அடுத்ததாக, கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக நடந்து வருகிறது.

முக்கிய தீவனம்

தமிழகம் முழுதும் வாரம், ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன. இவை, தமிழகம் முழுதும் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கால்நடைகளுக்கு மட்டுமன்றி, கறிக்கோழிகளுக்கும் முக்கிய தீவனங்களில் ஒன்றாக மக்காச்சோளம் உள்ளது. அத்துடன், எத்தனால் தயாரிப்புக்கும் மக்காச்சோளம் பெரிதும் பயன்படுகிறது. கறிக்கோழி பண்ணைகளுக்கு மட்டும், ஆண்டுக்கு, 30 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை. தமிழக உற்பத்தி வாயிலாக, 5 லட்சம் டன் மட்டுமே கிடைக்கிறது. பற்றாக்குறையை போக்க, கர்நாடகா, ஆந்திரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தருவிக்கப்படுகின்றன.இதற்காக, கிலோவுக்கு, 5 ரூபாயும், பீஹாரில் இருந்து வாங்கினால், கிலோவுக்கு, 10 ரூபாயும் வாடகை தர வேண்டும். கூடுதல் செலவு செய்து மக்காச்சோளத்தை தருவிப்பதால், இது, கறிக்கோழிகளின் உற்பத்தி செலவை அதிகரிக்க செய்கிறது. தமிழகத்தில் தேவைக்கேற்ப மக்காச்சோள உற்பத்தி இல்லை. விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காததால், ஆண்டுக்கு, 10 லட்சம் டன்னாக இருந்த மக்காச்சோள உற்பத்தி, தற்போது, 5 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. உற்பத்தியை அதிகப்படுத்த கலப்பின மக்காச்சோளத்தை கண்டுபிடிக்க வேண்டும். தற்போது, நம்மிடமுள்ள மக்காச்சோளம், ஏக்கருக்கு, 20 குவிண்டால் வரை விளைச்சல் கிடைக்கிறது.

நிரந்தர தீர்வு

சமீபகாலமாக, படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்ததும், விளைச்சல் குறைய காரணமாகிறது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்தாலும், புழுக்கள் கட்டுப்படுவதில்லை. மருந்துக்கே பல ஆயிரக்கணக்கில் செலவு செய்தால், விவசாயிகள் எவ்வாறு மக்காச்சோளம் உற்பத்தி செய்வர்? வேளாண் பல்கலை இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.மக்காச்சோள உற்பத்தியை பெருக்கும் விதமாக, தமிழக அரசு மானிய விலையில் விதைகள், உரம் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நீர்ப்பாசனங்கள் தடையின்றி கிடைக்க செய்வதுடன், நுாறு நாள் திட்ட பணியாளர்களை விவசாயத்துக்கு பயன்படுத்தி, மானிய விலையில் விதைகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதன் வாயிலாக, மக்காச்சோள சாகுபடி பரப்பளவு அதிகரிப்பதுடன், பற்றாக்குறை நீங்கி, கறிக்கோழி உற்பத்தி தொழிலும் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ