உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு இடங்களில் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியது

இரு இடங்களில் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியது

திண்டுக்கல் : இரு துறைகளிடமிருந்து உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிய கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. வருவாய்த்துறை சார்பில் அந்தந்த தாசில்தார் அலுவலகம் மூலமாக உதவித் தொகையாக ரூ.1500 வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழும் கல்வித் தகுதிக்கு ஏற்ப உதவித் தொகை வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வெவ்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டாலும் கூட ஏதாவது ஒரு உதவித் தொகையை மட்டுமே பெற முடியும். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளிடமிருந்து உதவித் தொகை பெறுவது தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 29 பயனாளிகளுக்கு இரு உதவித் தொகை வழங்கப்படுவது கருவூலத் துறை மூலம் தெரிய வந்தது. இவர்களுக்கு வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்ட உதவித் தொகை விடுவிக்கப்பட்டதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் வழங்கப்படும் உதவித் தொகை நடப்பு மாதம் நிறுத்தப்பட்டுள்ளது.இதன்பின் நடந்த ஆய்வில் இரு துறைகளிடமிருந்து உதவித் தொகை பெறும் 200 பேர் கண்டறியப்பட்டனர். இதேபோல் உயிரிழந்த மாற்றுத்திறனாளிகள் 300க்கு மேற்பட்டோரின் பெயர்களில் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இரட்டை உதவித் தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை சேகரித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை