பள்ளி இணையதள கட்டணம் சி.இ.ஓ.,க்கள் செலுத்த உத்தரவு
சென்னை:ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், பள்ளிகளின் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கான, இணையதள கட்டணத்தை செலுத்தும்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளிகளில், திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்படுகின்றன. அவற்றுக்கு, பி.எஸ்.என்.எல்., இணையதள இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு கட்டணம் செலுத்த, துவக்கப் பள்ளிகளுக்கு 706.82 ரூபாய், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 883.82 ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, துவக்கப் பள்ளிகளுக்கு மாதாந்திர தொகையாக, 710 ரூபாய்; மற்ற பள்ளிகளுக்கு 900 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை, மாநில திட்ட இயக்ககம் வாயிலாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, வரும் 25ம் தேதிக்குள் செலுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். சமக்ர சிக் ஷா திட்டம் தவிர வேறு திட்டங்களில் பயன்பெறும் பள்ளிகள், முக்கியமாக, பி.எஸ்.என்.எல்., தவிர, வேறு சேவையை பயன்படுத்தும் பள்ளிகளின் விபரங்களை, 'tnschoolsgov.in' என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டும். அந்த பள்ளி நிர்வாகிகள், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் வாயிலாக, பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுவரை, எஸ்.எஸ்.ஏ., நிதியை, முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளித்தலைமை ஆசிரியர்கள் பெற்று, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, கட்டணம் செலுத்தினர். இனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே நேரடியாக செலுத்துவர். இதன் வழியே, வேறு நிறுவனங்களின் இணையதள சேவையை பெறுவோருக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது.