உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்; இன்று சதுர்த்தி தீர்த்தவாரி

பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்; இன்று சதுர்த்தி தீர்த்தவாரி

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இன்று காலை சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறுகிறது.இக்கோவிலில், 10 நாள் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா ஆக., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடந்தன. நேற்று ஒன்பதாம் நாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு கற்பக விநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேரில் எழுந்தருளினர்.தொடர்ந்து, பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பெண்கள், சிறுவர், சிறுமியர் சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்தனர். தேர்கள் கோவிலை வலம் வந்தன. தொடர்ந்து மூலவர் கற்பக விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். நீண்ட வரிசையில் நின்று சுவாமி அலங்காரத்தை பக்தர்கள் தரிசித்தனர்.இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை நடை திறந்து, பக்தர்கள் தரிசனம் துவங்குகிறது. கோவிலிலிருந்து காலை 9:30 மணி அளவில் உற்சவ விநாயகர், சண்டிகேஸ்வரர் கோவில் தெற்கு படித்துறையில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து அங்குசத்தேவருக்கு படித்துறையில் அபிஷேக, ஆராதனை நடந்து தீர்த்தவாரி நடைபெறும்.மதியம் 1:30 மணிக்கு மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவு 11:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை