உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வளர்ச்சியில் பின்தங்கும் சென்னை விமான நிலையம் அரசு பாராமுகம், அதிகாரிகள் அலட்சியமே காரணம்

வளர்ச்சியில் பின்தங்கும் சென்னை விமான நிலையம் அரசு பாராமுகம், அதிகாரிகள் அலட்சியமே காரணம்

தனி வணிக மேம்பாட்டு பிரிவு இல்லாதது, விமான நிலைய ஆணையத்தின் அலட்சியம், தமிழக அரசின் பாராமுகம் போன்றவற்றால், சென்னை விமான நிலைய வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். எனினும் தெளிவான திட்டமிடல் இல்லாதது, பயணியரை கையாள்வதில் அலட்சியம் போன்ற காரணங்களால், மற்ற விமான நிலையங்களை விட, சென்னை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தனியார் மயம்

வளர்ச்சிக்கான பி.டி.யு., என்ற, வணிக மேம்பாட்டு பிரிவு, சென்னை விமான நிலையத்திற்கு தனியாக இல்லை. இப்பிரிவு, பசுமை மற்றும் புதிய விமான நிலையங்களை உருவாக்க உதவுவது; வணிக நோக்கங்களுக்காக காலியாக உள்ள நிலங்களை மேம்படுத்தி, விமான நிலைய ஆணையத்தின் வருவாயை பெருக்குவது; புதிய விமான வழித்தடங்களை ஈர்க்க, விமான நிறுவனங்களுடன் பேசுவது என, பல்வேறு பணிகளை மேற்கொள்ளும்.நாட்டில் பெரும்பாலான விமான நிலையங்கள், தனியார் மயமாகி விட்டன. இதனால், அந்தந்த நிறுவனங்கள், தங்களின் சொந்த முயற்சியில், விமான நிலையத்தை மேம்படுத்துவது, புது சேவைகளை பெருக்குவது என, வளர்ச்சி பணிகளை நோக்கி முன்னேறி வருகின்றன. சென்னையில் கொரோனாவுக்குப் பின், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி இல்லை. இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் சேவைகள் பல நிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்பு

தென்மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், சென்னை வளர்ச்சி அடைந்து வருகிறது என்றாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகள், வளர்ச்சிப் பணிகள் போன்றவை, குறித்த நேரத்தில் முடிக்கப்படுவதில்லை. எனவே சென்னை விமான நிலையத்திற்கு, தனியாக வர்த்தக மேம்பாட்டு பிரிவு அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர் உபைதுல்லாஹ் கூறியதாவது:பெங்களூரு விமான நிலையம் தனியார் மயமாக்கலுக்குப் பின், பல விமான நிறுவனங்கள், புதிய சர்வதேச வழித்தடங்களை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுகின்றன.

நடவடிக்கை இல்லை

பெங்களூரு விமான நிலையத்திற்கு என, பிரத்யேகமாக வர்த்தக மேம்பாட்டு பிரிவு செயல்படுகிறது. பெங்களூரில் இருந்து, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு, நேரடி விமான சேவை உள்ளது.ஆனால், சென்னைக்கு கிடைத்த, 'ஏர் பிரான்ஸ்' விமான நிறுவனத்தின் பாரீஸ் சேவை; ஆல் நிப்போன் ஏர்லைன்ஸின் டோக்கியோ சேவை, தற்போது இல்லை. இதை மீண்டும் கொண்டுவர, யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயங்கிய காலத்தில், சென்னையில் இருந்து- அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு விமானம் இயக்கப்பட்டது. அதேபோல், ரீ யூனியன் தீவு, செஷெல்ஸ் தீவு ஆகியவற்றுக்கும், விமானங்கள் இயக்கப்பட்டன; தற்போது இல்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் நேரடி சேவை இல்லை. சென்னையில் ஏற்கனவே இயங்கிய சேவைகள் பறிக்கப்பட்டு, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற விமான நிலையங்களுக்கு சென்றுள்ளன. இவற்றை கண்காணித்து மீட்க, விமான நிலைய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் எந்த முயற்சியும் இல்லை!

விமான போக்குவரத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பங்களிப்பு முதன்மையானது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு அவசியம். சென்னைக்கு விமான சேவையை அதிகப்படுத்த, தமிழக அரசு, கடந்த ஆண்டு விமான நிறுவனங்களுடன் பேச்சு எதுவும் நடத்தவில்லை. முதல்வர் ஸ்டாலின், 2023ம் ஆண்டு ஒன்பது நாள் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றார். அப்போது, விமான போக்குவரத்து அமைச்சருக்கு, சென்னையில் இருந்து டோக்கியோவுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்தக்கோரி, கடிதம் எழுதினார். அதன்பின், எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தி.மு.க., பொருளாளரும், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி.,யுமான டி.ஆர்.பாலு. சென்னை விமான நிலைய ஆலோசனை குழு தலைவராக உள்ளார். ஒவ்வொரு முறை ஆலோசனை கூட்டம் நடக்கும் போதும், விமான நிலைய வளர்ச்சி பணிகள், புதிய விமான சேவை குறித்து, அவர் பேச வேண்டும். ஆனால், எதுவும் பேசுவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில், கடந்த 8ம் தேதி, சென்னை விமான நிலைய ஆலோசனை கூட்டம் பாலு தலைமையில் நடந்தது. அதிலும், சென்னைக்கு புதிய விமான சேவைகள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதிலும், அவர் கவனம் செலுத்த வேண்டும் என்பது, பயணியரின் எதிர்பார்ப்பாக உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ