உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! மேட்டூர் அணை கால்வாய்களில் நீர் திறப்பு

பழனிசாமி கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! மேட்டூர் அணை கால்வாய்களில் நீர் திறப்பு

சென்னை : 'மேட்டூர் அணையில் இருந்து, உடனடியாக மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், இன்று முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். அரசு வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அணையில் இருந்து, கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில், பாசனத்திற்காக நீர் திறந்து விட, சேலம் எம்.பி., செல்வகணபதி, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், விவசாய சங்க பிரதிநிதிகள், முதல்வரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.அதை ஏற்று, இன்று முதல் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சேலம் மாவட்டத்தில் 16,443; ஈரோடு மாவட்டத்தில் 17,230; நாமக்கல் மாவட்டத்தில், 11,327 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில், நேற்று முதல் டிச., 13 வரை, 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி

இதுகுறித்து அ.தி.மு.க., தரப்பில் கூறியதாவது:மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு காலவாயில், பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று பழனிசாமி, மக்கள் நலனுக்காகத்தான் அரசிடம் கோரிக்கை வைத்து, அறிக்கை வெளியிட்டார். மக்கள் நலனுக்கான விஷயம் அதை செய்யலாம் என, அரசுத் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்காக, முதல்வருக்கு நன்றி சொல்லலாம். எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அவ்வளவுதான்.இவ்வாறு அ.தி.மு.க., தரப்பில் கூறினர்.

நிரப்பும் திட்டம் முடக்கம்

பழனிசாமி அறிக்கை:மேட்டூர் அணை நிரம்பி, 120 அடியை கடந்ததும் வெளியேற்றப்படும் உபரி நீர், கடலில் கலந்து வீணாகும். அப்போது அணைக்கு வரும், மழைக்கால வெள்ள உபரி நீரை, நீரேற்று பாசனம் வழியே, சேலம் மாவட்டத்தில், சரபங்கா வடிநிலத்தில் உள்ள, 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை, 565 கோடி ரூபாயில் செயல்படுத்த, அ.தி.மு.க., அரசில் திட்டமிடப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 4ல், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள உபரி நீர், மின் மோட்டார்கள் வழியே நீரேற்றம் செய்யப்பட்டு, 12 கி.மீ., துாரத்தில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் வழியே கொண்டு செல்லப்படும்.இதனால் வெள்ளாளபுரம், கன்னந்தேரியில் அமைக்கப்படும், துணை நீரேற்று நிலையங்களில் இருந்து, மின் மோட்டார்கள் உதவியுடன் குழாய்கள் வழியாக, ஒன்பது ஒன்றியங்களில் உள்ள, 12 பொதுப்பணித் துறை ஏரிகள், 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகள் நிரம்பி, 4,300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அப்பகுதியில் விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடை வளர்ப்பு மேம்படும். இத்திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் முடிந்து, திப்பம்பட்டி பிரதான நிலையில் இருந்து, நீரேற்று முறையில் குழாய்கள் வழியே, ஆறு ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பணிகளை, 2021 பிப்., 27ல் துவக்கி வைத்தேன்.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 38 மாதங்கள் முடிந்த நிலையில், இத்திட்டத்தின் மீதமுள்ள பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போது மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கும் அவலத்தை, தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Palanisamy T
ஆக 05, 2024 04:30

கடலில் வீணாகக் கலக்கும் நீரென்றுச் சொல்லவேண்டாம்.. கடலுக்கு செல்ல வேண்டிய நீர் சென்றுதான் ஆக வேண்டும்.இல்லாவிட்டால் நாளடைவில் கடலின் உப்புத்தன்மை அதிகரித்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப் படும். மேலும் சுற்றுச் சூழல் பாதிக்கப் பட்டு சுழற்சிமுறையில் பெய்யும் மழையும் குறையும். கடல்வெட்பம் தாங்காமல் கரையில் வந்து மடியும் கடல்வாழ் உயிரினங்களை பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். இதை நாம் இயற்க்கை கொடுக்கும் ஒரு எச்சரிக்கை யாக ஏற்றுக் கொள்ளவேண்டும் .


Arachi
ஆக 01, 2024 00:37

யார் நல்ல கருத்து சொல்கிறார் என்பது முக்கியமல்ல என்ன கருத்து சொல்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவது ஒரு ஆரோக்கியமான அரசியல். இரு தலைவர்களுக்கும் பாராட்டுக்கள்.நம்மை நாம் ஆளவேண்டும்.


Yasararafath
ஜூலை 31, 2024 20:47

எது எப்படியோ தமிழ்நாட்டிற்க்கு தண்ணீர் வந்தால் சரி


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 15:39

ஒண்ணுக்குள்ள ஒண்ணு .....


metturaan
ஜூலை 31, 2024 10:49

நேற்றைய மதியம் வரை கால்வாய் வறண்டிருந்தது நேரில் கண்டேன். திரு பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையை ஏற்றே நீர் திறந்திருக்க கூடும். சரபங்கா நீரேற்ற திட்டம் மூலம் பணி நிறைவடைந்த ஏரிகளுக்கு உபரி நீரையும் விரைந்து பகிர்ந்து வீணாக கடலில் கலக்கும் நீரை சற்றேனும் சேமிக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்..


enkeyem
ஜூலை 31, 2024 09:47

இரண்டு பேருமே நல்ல நடிகர்கள். இவர் கேட்டாராம் உடனே அவர் திறந்து விட்டாராம். ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் காண அடி நீர் வரத்து காரணமாக நேற்று இரவே மேட்டூர் அணை நிரம்பி விட்டது. அணை நிரப்பும்போது வரும் நீர் அத்தனையும் பாதுகாப்பு கருதி அதிகாரிகளே திறந்து விடுவார்கள். தமிழக மக்களை இதுவரை ஏமாற்றியது போதும் அரசியல்வாதிகளே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ