உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை மீட்பு

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இருந்து, தாய்லாந்து வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, 5.20 கோடி ரூபாய் மதிப்புள்ள, நடனமாடும் குழந்தை கிருஷ்ணர் உலோகச் சிலை மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, பழங்கால சிலைகள் மற்றும் கலை பொருட்களை மீட்கும் முயற்சியில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி., தினகரன் தலைமையில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், எஸ்.பி., சிவகுமார் மற்றும் திருச்சி மத்திய மண்டல கூடுதல் எஸ்.பி., பாலமுருகன் ஆகியோர், இணையதளம் ஒன்றில், தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட, பாம்பின் மேல் நடனமாடும் காளீயநர்த்தன கிருஷ்ணர் எனும் குழந்தை கிருஷ்ணர் உலோக சிலையின் படம் இடம்பெற்றுள்ளதை அறிந்தனர்.தொடர் விசாரணையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் லாட்ச் போர்டு என்பவர், குழந்தை கிருஷ்ணர் சிலையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. அவர், பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை சட்ட விரோதமாக வாங்கி விற்பவர் என்பதும், 2020ல் இறந்துவிட்டார் என்பதும் தெரியவந்தது. மேலும், 11 - 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குழந்தை கிருஷ்ணர் சிலையை, 2005ல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திரகபூர், தாய்லாந்து வழியாக அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றுள்ளார். இச்சிலையை, டக்ளஸ் லாட்ச் போர்டிடம், 5.20 கோடி ரூபாய்க்கு விற்றதும், குழந்தை கிருஷ்ணர் சிலை, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பிடம் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்திய தொல்லியல் துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக, தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், குழந்தை கிருஷ்ணர் சிலையை மீட்டு, நேற்று தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். இச்சிலை, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும், எந்த கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலை என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சிலை மீட்பு பணியில் ஈடுபட்ட, ஐ.ஜி., தினகரன் உள்ளிட்டோரை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
செப் 07, 2024 08:19

பாராட்டுக்கள் , இதே போன்று மக்களையும் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டுகிறோம், உங்கள் துறையே மிகவும் புனிதமான பெயருடன் விளங்குகிறது காவல் , மக்களைக் காக்கும் கடவுள்கள் . பணியில் சேர்வதற்கு முன்பாக இருக்கும் அதே துடிப்புடன் , எவ்வித அச்சமும் இன்றி பணியாற்ற வேண்டுகிறோம் . வாழ்க உங்கள் சேவை, வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை