உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னடம் பேசிய கண்டக்டருக்கு பெலகாவியில் அடி உதை

கன்னடம் பேசிய கண்டக்டருக்கு பெலகாவியில் அடி உதை

பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவி பகுதியில், மராத்தி பேசாமல், கன்னடம் பேசியதாக கூறி, பஸ் கண்டக்டரை ஒரு கும்பல் அடித்து உதைத்தது. கர்நாடகாவில், மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தின் சுலேபவி கிராமத்தில் நேற்று இரவு அரசு பேருந்து சென்றது. அதில் ஏறிய 14 வயது சிறுமியும், மற்றொருவரும் கண்டக்டர் மகாதேவப்பாவிடம், 51, மராத்தியில் பேசினர். 'எனக்கு மராத்தி தெரியாது; கன்னடத்தில் பேசுங்கள்' என மகாதேவப்பா கூறினார். இதையடுத்து, கிராமத்தின் பஸ் ஸ்டாப்பில் நின்ற சிலர், கும்பலாக சேர்ந்து மகாதேவப்பாவை தாக்கினர். இதில், ஆடை கிழிந்து, காயமடைந்த அவர், பெலகாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலைக் கண்டித்து, கன்னட ஆதரவு அமைப்பினர், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன; போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது. தாக்குதல் தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கண்டக்டர் மகாதேவப்பா, பாலியல் தொல்லை அளித்ததாக அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அவருக்கு எதிராக போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது. பெலகாவி போலீஸ் கமிஷனர் மார்ட்டின் கூறுகையில், “போக்சோ புகார் குறித்து விசாரித்து குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்றார். மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தில், மராத்தி பேசும் மக்கள் அதிகமாக உள்ளதால், மஹாராஷ்டிராவுடன் இணைக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இதனால், எப்போதுமே இந்த மாவட்டத்தில் பதற்றம் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ