உதயநிதிக்கு எதிரான வழக்கு செப்., 10ல் குறுக்கு விசாரணை
சென்னை:அமைச்சர் உதயநிதிக்கு எதிராக தொடரப்பட்ட மான நஷ்டஈடு வழக்கில், குறுக்கு விசாரணைக்கு ஆஜராக, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம் மணச்சநல்லுாரில், 2021ல் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தி.மு.க.,வின் அப்போதைய இளைஞர் அணி செயலர் உதயநிதி பேசும் போது, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த அப்போதைய துணை சபாநாயகர் ஜெயராமனின் மகனை தொடர்புபடுத்தி பேசினார்.இதையடுத்து, உதயநிதி, கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிராக ஜெயராமன் தாக்கல் செய்த மனுவில், 'எனக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, என் பெயர் பயன்படுத்தப்படுகிறது. 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உதயநிதி மற்றும் கலைஞர் 'டிவி' நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். அவதுாறாக பேச தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. உதயநிதி தரப்பில், 'உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய மூன்று நாட்களில், இவ்வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த இயலவில்லை. மீண்டும் மாஸ்டர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, குறுக்கு விசாரணைக்காக செப்., 10ல் மாஸ்டர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் ஆஜராக உத்தரவிட்டார்.